Friday 9 October 2015



    1970 செப்டம்பர், ஜோர்டானில் ஓர் இனப்படுகொலை நடந்தது! ஜோர்டான் மக்கட்தொகையில் அறுபது சதவீதமாக இருந்த பாலஸ்தீனர்களை குறி வைத்து அந்த இனவழிப்பு நடந்தது. CIA கைக்கூலியான மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான படையினர் நடத்திய இனவழிப்புப் போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். இன்னொரு CIA கைக்கூலியான சியா உல் ஹாக் தலைமையிலான பாகிஸ்தானிய படைகள், ஜோர்டானியப் படைகளுக்கு உறுதுணையாக நின்று, அந்த இனவழிப்பை நடத்தி முடித்தன

    . செப்டம்பர் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்கள் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்". அவர்களை கொன்று குவித்தவர்களும் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்." ஏனிந்த வன்மம்? 1970 செப்டம்பர், அமெரிக்கா உதவியுடன் அந்த இனவழிப்புப் போர் நடந்திரா விட்டால், பாலஸ்தீன மார்க்சிய விடுதலை இயக்கங்கள், ஜோர்டானின் ஆட்சியை கைப்பற்றி அதனை ஒரு கம்யூனிச நாடாக மாற்றி இருந்திருப்பார்கள்! மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கத்துடன், அதன் பக்க விளைவாக, அயலில் ஜோர்டான் என்ற புதிய தேசம் உருவானது. இஸ்ரேலில் இருந்து விரட்டப் பட்ட பாலஸ்தீனர்கள் ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர். மன்னர் ஹுசைனின் சொந்த இனக் குழுவான ஹாஷேமித் அரபுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஜோர்டானில், வெகு விரைவில் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

     1967 போருக்குப் பின்னர், ஜோர்டான் வசமிருந்த மேற்குக் கரையும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதனால் மேலும் பெருந்தொகை பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானுக்குள் தஞ்சம் புகுந்தனர். ஜோர்டானில் நிரந்தரமான பாலஸ்தீன அகதி முகாம்கள் உருவாகின. புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மத்தியில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஆதரவுத் தளங்களை ஏற்படுத்திக் கொண்டன. இஸ்ரேலுடனான நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததாலும், பெருந்தொகை பாலஸ்தீனர்களின் புகலிடமாக இருந்த படியாலும், ஜோர்டான் பாலஸ்தீன கெரில்லாக்களின் விருப்பத் தெரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து இஸ்ரேலுக்குள் கெரில்லாத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

     ஆயினும், ஜோர்டான் மன்னர் ஹுசைனுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இரகசிய உறவு இருந்து வந்தது. பாலஸ்தீன கெரில்லாக்கள் தனது நாட்டை தளமாகப் பயன்படுத்துவதை அவர் விரும்பவில்லை. அப்படியான தருணத்தில், 2 நவம்பர் 1968 நடந்த சம்பவம் ஒன்று, ஜோர்டான் அரசுடன் பகை முரண்பாட்டை உண்டாக்கியது.  இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த பால்பூர் உடன்படிக்கையின் 51 வது ஆண்டு நிறைவையொட்டி, புதியதொரு பாலஸ்தீன இடதுசாரிக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. தலைநகர் அம்மானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த, ஜோர்டானிய பாதுகாப்புப் படையினர், கலவரத்திற்கு தலைமை தாங்கியவர்களை கைது செய்தது. நீண்ட காலமாக, பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள், ஜோர்டானுக்குள் சுதந்திரமாக நடமாடித் திரிந்தன. தற்போது ஜோர்டானிய படைகள், வீதித் தடையரண்களை அமைத்து, கெரில்லாக்களின் வாகனங்களை சோதனை போடத் தொடங்கினார்கள்.

     பாலஸ்தீன இயக்கங்கள், மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினார்கள். ஒரு தடவை, ஜோர்டானிய பொலிஸ் வாகனத்தை கண்ணி வெடி வைத்து தாக்கிய கெரில்லாக்கள், அதில் பயணம் செய்த பொலிஸ்காரர்களை உயிருடன் பிடித்து சுட்டுக் கொன்றனர். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற இராணுவ வீரர் ஒருவரும் கொலை செய்யப் பட்டார். இன்னொரு சம்பவத்தில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்ட தோழர்களை விடுவிக்குமாறு, ஆயுதங்களுடன் சென்ற கெரில்லாக்கள் மிரட்டினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில், போலீஸ்காரர்கள் காயமுற்று, ஒரு வழிப்போக்கர் கொல்லப் பட்டார். அதே நேரம், ஜோர்டானிய இராணுவமும் பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. அதில் சிக்கி பல அகதிகள் உயிரிழந்தனர். PLO எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல இயக்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இயங்கியது. அதில் ஒவ்வொரு இயக்கமும் தனக்கென தனியான தலைவரும், கொள்கையும் கொண்டிருந்து. அப்போது தான் PLO தலைவராக தெரிவான யாசிர் அரபாத், மன்னர் ஹுசைனுடன் சேர்ந்து பிரச்சினையை சமரசமாக தீர்த்து வைக்கப் பார்த்தார். ஆயினும், அரபாத்தின் இயக்கத்திற்குள்ளே கூட, ஜோர்டானில் ஒரு பாலஸ்தீன புரட்சி நடத்துவதற்கு ஆதரவு இருந்தது. பிற்காலத்தில், தன் பக்க தவறுகளை மறைப்பதற்காக, புரட்சி நசுக்கப் பட்டதற்கு மார்க்சிஸ்டுகளே காரணம் என்று யாசிர் அரபாத் காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். கருத்து ஒற்றுமை இல்லாத இயக்கங்களை குற்றஞ் சாட்டினார். இருப்பினும், எதிரியை குறைவாக எடை போட்டது, அரபாத் பக்கத் தவறாக இருந்தது. அதாவது, ஜோர்டான் ஆட்சியை பாலஸ்தீன இயக்கங்கள் கைப்பற்ற நினைத்தால் அது இலகுவாக முடிந்திருக்கும் என்று நம்பினார். ஈராக்கும், சிரியாவும் ஆதரவளித்திருக்கும் என்று நம்பினார். உண்மையில், 1970 பெப்ரவரி வரையில், ஜோர்டானில் பாலஸ்தீன இயக்கங்களின் கை ஓங்கியிருந்தது. தலைநகர் அம்மானின் சில பகுதிகள் உட்பட, பெரும்பாலான ஜோர்டானின் பிரதேசங்கள் பாலஸ்தீன இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

     அவர்கள் தேசத்திற்குள் இன்னொரு தேசத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.  காணுமிடமெங்கும் பாலஸ்தீன இயக்கங்களின் வீதித் தடையரண்கள், ஜோர்டானிய படைகளை எட்டத்தில் வைத்திருந்தன. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், பாலஸ்தீன இயக்கங்கள் சொன்னது தான் சட்டமாக இருந்தது. அவர்கள் தமது பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்களை நிறுவினார்கள்.சுருக்கமாக சொல்வதென்றால், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எப்படி இருந்ததோ, அதே மாதிரித் தான் ஜோர்டானில் பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது.

     பாலஸ்தீனர்கள் மத்தியில், தீவிர கம்யூனிச இயக்கமாக கருதப் பட்ட PFLP, ஜோர்டானிய புரட்சியில் ஏறக்குறைய தலைமைப் பாத்திரம் வகித்தது எனலாம். அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் ஆயுதப் போராட்டம் நடத்திய தீவிர கம்யூனிச இளைஞர்கள், PFLP முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களது ஆதரவுடன் PFLP, இதனை ஒரு சர்வதேச அரபுப் புரட்சியின் தொடக்கமாக கருதியது.  PFLP, "அமெரிக்க- இஸ்ரேலிய கைக்கூலி ஹுசைனின், பிற்போக்கான மன்னராட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி" என்று பிரச்சாரம் செய்தது. ஜோர்டானிய தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவி, வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியது.

     மார்க்சிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், பரவலாக மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டன. பள்ளிவாசல்களை கைப்பற்றி, அங்கிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் கம்யூனிசப் பிரச்சாரம் செய்தார்கள்! இதற்கிடையே, தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொண்ட யாசிர் அரபாத், ஜோர்டான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. AK-47, RPG, மோர்ட்டார் ஆகிய சிறு ஆயுதங்களைக் கொண்டு, பாலஸ்தீன கெரில்லாக்கள் துணிச்சலுடன், ஜோர்டானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், வட கொரியா சென்ற PFLP தலைவர் ஜோர்ஜ் ஹப்பாஷ், அங்கிருந்த ஜப்பானிய செம்படையுடன் இணைந்து, சர்வதேச மட்டத்தில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார். "சர்வதேச புரட்சிப் படையின்" துணிச்சலான நடவடிக்கை, அன்று உலகம் முழுவதும் பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேச வைத்தது.

     இரண்டு மேற்கத்திய நாடுகளின் பயணிகள் விமானங்கள் கடத்தப் பட்டன. ஓர் அமெரிக்க விமானமும், சுவிஸ் விமானமும், ஆகாயத்தில் பறக்கையில் கடத்திச் செல்லப் பட்டன. கடத்திச் செல்லப் பட்ட விமானங்கள், ஜோர்டானில் உள்ள Dawsons Field விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டன. அப்போது அது "புரட்சிகர விமான நிலையம்" என்று பெயர் மாற்றப் பட்டது! ஆறு நாட்களின் பின்னர், இன்னொரு மேற்கத்திய விமானம் அங்கு கொண்டு வரப் பட்டது. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த விமானப் பயணிகள் அனைவரையும் விடுவித்து விட்டு, மூன்று விமானங்களையும் குண்டு வைத்துத் தகர்த்தனர். நிலைமை எல்லை மீறிச் செல்வதை கண்டு கொண்ட அமெரிக்கா, நேரடியாகவே ஜோர்டானிய உள்விவகாரங்களில் தலையிட்டது. இஸ்ரேலிய, அமெரிக்க விமானங்கள் ஜோர்டானிய வான்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாலஸ்தீன கெரில்லாக்களுக்கு உதவ வேண்டாம் என்று, ஈராக் அரசுக்கு அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்க, இஸ்ரேலிய உதவியை பெற்றுக் கொண்ட ஜோர்டானியப் படைகள், பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் முன்னேறின. அந்தக் காலப் பகுதியில், ஜோர்டானிய படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக நிலை கொண்டிருந்தன. பின்னாளில் பாகிஸ்தான் சர்வாதிகாரியாக வந்த சியா உல் ஹக், அன்று ஜோர்டானில் இருந்த பாகிஸ்தானிய படைகளுக்கு தலைமை தாங்கினார்.  ஜோர்டானிய - பாகிஸ்தானிய கூட்டுப் படைகள், பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது கண்மூடித் தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தின. ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப் பட்டனர். பல அகதி முகாம்கள் தரை மட்டமாக்கப் பட்டன. செப்டம்பர் மாதம் மட்டிலும், குறைந்தது இருபதாயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர்.


     ஜோர்டானில் பாலஸ்தீனப் புரட்சி தோற்கடிக்கப் பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, 1971 ம் ஆண்டு வரையில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஜோர்டானுக்குள் இருந்தன. ஆனால், அவர்களை மெல்ல மெல்ல வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.  இறுதியில், அனைத்து பாலஸ்தீன இயக்கங்களும், ஆயுதங்களுடன் லெபனானுக்கு தப்பியோடின. தெற்கு லெபனானில் தளம் அமைத்து, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தன. ஜோர்டானில் நடந்த செப்டம்பர் படுகொலைகளை நினைவுபடுத்தும் "கருப்பு செப்டம்பர்" என்ற பெயர், வேறொரு காரணத்தால் வரலாற்றில் நிலைத்து விட்டது.

     1972 செப்டம்பர், (மேற்கு) ஜெர்மனி மியூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதற்கு வந்திருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், சில தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்து கொல்லப் பட்டனர். பாலஸ்தீன, ஐரோப்பிய தீவிரவாதிகளை கொண்ட அந்த தீவிரவாதிகளின் குழு, தம்மை "கருப்பு செப்டமபர் இயக்கம்" என்று அழைத்துக் கொண்டனர். மியூனிச் படுகொலைச் சம்பவம் உலகப் புகழ் பெற்று, கருப்பு செப்டம்பர் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

    Category: articles

    Friday 18 September 2015



     

    1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது.ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை.இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்

    .நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்
    . ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர், ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி…… 'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள். (ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)
     இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்

    .இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான். ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான்.மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான்.பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான். சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு.மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான்.உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள்.சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்

    . 1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள்.இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள். இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.

    ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர். புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.

     உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது.மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது.கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது.இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது.இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர்.மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள். ஜுஹைமான் இமாம் மஹ்தி என அறிவித்த அவன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி. கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர். 


    இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

     எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. 





    Category: articles

    Tuesday 15 September 2015

    மல்ஹமா என்பது சண்டை, போர் ஆகும். ஆனால் நாம் நினைப்பது போல் அது ஓர் சிறிய சண்டை அல்ல, தொடர்ச்சியாக நடக்க கூடிய போர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய சண்டை. நீண்ட கால மோதல். சிறிய போரிலிருந்து தொடரக்கூடிய பெரிய போர். மூன்றாம் உலக போர் என்றே சொல்லலாம்.

    சமகால முஸ்லீம்களை பொறுத்த வரை மிக முக்கிய நிகழ்வான மல்ஹமா கடுமையான குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நடைபெறும். இமாம் மஹதி (அலை), ஈஸா (அலை), கிலாஃபா எழுச்சி மற்றும் தஜ்ஜால் வருகை சம்பந்தப்பட்டது. பத்ர் போரை போல் திருப்புமுனையை உண்டாக்கும் போர் என்று சொன்னாலும் மிகையாகாது.

    முஸ்லீம்களுக்கும் ரோமர்களுக்கும் மத்தியில் மல்ஹமா நடைபெறும்


    ரோம் என்பது அரசியல் ரீதியான அடையாளம் அல்ல. இனம் அல்லது கலாச்சாரம் ரீதியான அடையாளம். ஒரு நேரத்தில் ரோமர்கள் ஐரோப்பாவில் இருந்தார்கள். ஆனால் தற்போது வட, தென் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இன்னும் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அதனையும் உள்ளடக்கும்.


    பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கு தகுந்ததுபோல், மேற்குலகம் தன்னை இஸ்லாத்திற்கு எதிராக, சத்தியத்திற்கு எதிராக கட்டமைத்து வருகின்றது. இது இன்றோ நேற்றோ இருக்ககூடிய உருவாக்கம் அல்ல. பல நூற்றாண்டுகளாக அவர்கள் தங்களை கட்டமைத்து வந்திருக்கின்றார்கள். இன்னொரு பக்கம் முஸ்லிம் உலகத்தை பார்ப்போம் என்றால், முஸ்லிம் தலைமைகள் ஏமாளிகளாகவும், பெரும் உறக்கத்திலும், ஏமாற்று பேச்சுவார்த்தை / அமைதி ஒப்பந்தம் என்ற பெயரிலும், மேற்கத்தியர்களின் அடிமைகளாகவும் உள்ளனர். புனித தலங்களின் காப்பாளர்களே அமெரிக்காவின் கம்யூனிஸத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை விட அதிகம் முஸ்லீம் உம்மத்தின் பொருளாதரத்தை செலவழித்திருக்கிறார்கள் என்றால் பிற நாடுகள் குறித்து கேட்கவே வேண்டாம்.


    ஓர் கட்டத்தில் ரோம் கிறித்தவத்தை தழுவுகின்றது. கிறித்துவத்தின் பெயரால் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். கிறித்துவ மதத்தையே மாற்றிவிட்டார்கள். கிழக்கில் இருந்த கிறித்துவர்களும் அரபு கிறித்தவர்களும் உண்மையில் சாந்தமான மார்க்கத்தை தான் பின்பற்றினார்கள். திரித்துவ கொள்கை உள்ளிட்ட ஷிர்க்கான விஷயங்களை பின்பற்றினாலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற அடிப்படையே அவர்களின் இயல்பாக இருந்தது. சாந்தமான மதம் என்று பெயர் எடுத்த கிறித்தவத்தை, மனித வரலாற்றில் கிறித்தவத்தை விட மனித இரத்தத்தை ஓட்டாத மதம் இல்லை என்ற நிலைக்கு ரோமர்கள் ஆக்கிவிட்டார்கள். சிலுவை போரில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் / நிலத்துவ பிரபுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்கள் / ஐரோப்பாவில் கிறித்துவ பிரிவுகளுக்கு மத்தியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்கள் / வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டத்தில் பூர்வகுடிகளை ஒட்டுமொத்த இனபடுகொலை செய்தவர்கள் (ஆராய்ச்சிக்காக விட்டுவைத்த ஒரு சிலரை தவிர) என ஆரம்பித்து பொருளாதர தடையின் மூலம் இலட்சக்கணக்கான ஈராக்கிய குழந்தைகளை கொன்றது,இஸ்ரேலின் மூலம் பலஸ்தீன் இளங்குருத்துக்களையும் அகதிகளையும் கொன்றது, ஆப்கான், சோமாலியா, ஷாம் வரைக்கும் அவர்களின் கொலைப்பட்டியல் நீண்டது. நீண்ட காலமாக சத்தியத்தின் வாடையே இல்லாமல், சத்தியத்திலிருந்து தொலைதூரம் வாழக்கூடிய ஓர் சமூகமாக ரோமர்கள் இருந்த காரணத்தால் ஷைத்தான் அவர்களை தேர்ந்தெடுத்து கொண்டான் தன்னுடைய நாச வேலையை அரங்கேற்றுவதற்கு.  இஸ்லாத்துக்கு எதிரான தன்னுடைய போரில் போரிட ஷைத்தானுக்கு சிறந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.


    ஷாமில் உள்ள அல் அமக் / தாபிக்கில் ரோமர்கள் முஸ்லீம்களை தாக்குவார்கள் 


    போரின் தொடக்கத்தில் முஸ்லீம்களின் நிலை பலவீனமானதாகவும் இறுதியில் வெற்றியானதாகவும் மாறும். பித்னா உச்சத்தில் இருப்பது போல் நன்மையும் அதிகமாக இருக்கும். தஜ்ஜால் வருவதை போல் ஈஸாவும் மஹ்தி (அலை) வருவார்கள்.மதீனாவிலிருந்து முஸ்லீம்களின் ராணுவம் ரோமர்களை எதிர்கொள்ள செல்லும். அன்றைய காலகட்டத்தின் உலகின் மிகச் சிறந்த நம்பிக்கையாளர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பது அவர்களின் சமூகத்தில் நாம் இருக்க மாட்டோமா என்று நம்மை ஏங்க வைக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த ரோமர்களும் இஸ்லாத்துக்கு எதிராக இல்லை. அவர்களிலும் சத்தியத்தை தேடுபவர்களின் உள்ளங்களை இஸ்லாம் வெல்லும். இறைவனால் சபிக்கப்பட்ட சமூகமான யூத சமூகத்திலேயே அப்துல்லா பின் ஸலாம் (ரலி) முதல் லியோபால்டு முஹம்மது அஸத் வரை இஸ்லாத்தை ஏற்று கொண்டது இதற்கான தெளிவான உதாரணம். இஸ்லாத்தை ஏற்று கொண்ட ரோமர்களான தங்களது சகோதரர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு முஸ்லீம்களிடம் கோரிக்கை விடுப்பார்கள்.


    ஆனால் அவர்களுக்கு தெரியாது போலும் இஸ்லாம் எத்தகைய நிலப்பரப்புக்கும் கட்டுப்படாது, அல்லாஹ்வின் பெயர் உயர்த்தப்படும் இடமெல்லாம் முஸ்லீமின் தேசம் என்பதும் இறைவனின் வாக்கு நிலைநாட்டப்படும் இடமெல்லாம் நம் நாடே எனும் உண்மையும்.எத்தகைய உறவை விடவும் ஈமானிய உறவு பலம் வாய்ந்தது என்பதற்கு அபுபக்கர் ரலி மகனை நோக்கி சொன்ன சொல்லாடலிருந்து அரபுலகில் பிறந்த அப்துல்லாஹ் அஸ்ஸாமிலிருந்து உசாமா வரை ஆப்கன் மண்ணில் இரத்தம் சிந்தியது வரை தெளிவான வாழும் சாட்சிகள். எங்களது சகோதரர்களை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் என்று முஸ்லீம்கள் கூறியவுடன் போர் தொடங்கும். முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பங்கினர் புறமுதுகிட்டு ஓடுவர். அவர்கள் அது வரை செய்த நல்லமல்கள் அழிக்கப்படுவதோடு அவர்களின் தவ்பாவும் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படாது. இவர்களுக்கும் கிலாபாவை மீள் கட்டமைக்க போகிறோம், புதிய விடியலை காண்பிக்க போகிறோம், ஏகத்துவத்தின் அடிப்படையிலான சமூகத்தை சமைக்க போகிறோம் என்று கூறிக் கொண்டுஅல்லாஹ்வுக்கு இணையான தாகூத்களை உருவாக்கும் இஸங்களுக்கு சாமரம் வீசி கொண்டு அதிகாரம் மக்களுக்கே என்று கீழிறிங்கியவர்களுக்கும் என்ன வித்தியாசம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. (எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். (3:8)).

     மூன்றில் இன்னொரு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த ஷஹீதுகளாக கணிக்கப்படுவர். மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினருக்கு அல்லாஹ் வெற்றியை கொடுப்பான். கான்ஸ்டன்டிநோபிலை (துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்) வெற்றி கொள்ளும் வரை அவர்களை எதுவும் ஒன்றும் செய்ய இயலாது. கனீமத் பொருட்களை பங்கிடும் போது தஜ்ஜால் வந்து விட்டான் என்று செய்தி கேட்டு ஷாமுக்கு செல்வர். பின்பு அது வதந்தி என்பது புலனாகும். சில காலம் கழித்து தஜ்ஜால் ஈஸா (அலை) அவர்களால் கொல்லப்படுவான் என்பது தனி விடயம்.


    ஈராக், ஷாமின் மீது பொருளாதார தடை

    "ஒரு காலம் வரும். அச்சமயம் ஈராக் மீது தடை விதிக்கப்படும். எவ்வித உணவு பொருளோ அல்லது பொருளாதார உதவியோ உள்ளே நுழையாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய போது யார் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என கேட்கப்பட்ட போதுஅல் அஜம் (முஸ்லீமல்லாத அரபி அல்லாதவர்கள்) என்று கூறினார்கள். ஷாமின் (பாலஸ்தீன், சிரியா, ஜோர்டான், ஈராக்) மீதும் அவ்வாறே தடை ஏற்படுத்தப்படும் என்றும் கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அர்ரூம் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என பதிலளித்தார்கள். ஈராக்கின் மீது ஏற்படுத்தப்பட்ட பொருளாதார தடையும் ஈராக்கில் கிளம்பிய தீ இன்று ஷாம், ஏமன் என விரிவடைவதும் இந்நபிமொழி உயிர்ப்பிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஏமனை பற்றி குறிப்பிடும் போது ஏமனின் இருந்து கிளம்பும் 12,000 நபர்கள் கொண்ட படை தனக்கு பிறகு சிறந்த படை என்றும் ஈமான் ஏமனில் இருக்கிறது என்று சிலாகித்து கூறியுள்ளார்கள். மேலும் எப்படையை கைக்கொள்வது என்பது பற்றிய கேள்விக்கு ஷாமில் உள்ள படையை கைக்கொள்ளுங்கள் என்றும் பதிலளித்துள்ளார்கள்.


    30 வருடங்களுக்கு முன் எவ்வித ஊடகத்திலும் முஸ்லீம் உம்மத் குறித்து விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியாகவோ தவறாகவோ இஸ்லாம் விவாதப்பொருளாகி உள்ளதை தெளிவாக உணரலாம். அதனால் தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பார்வையாளர்களாக இருந்த முஸ்லீம்கள் நிச்சயம் இறைவன் நாடினால் மூன்றாம் உலக போரில் கதாநாயகர்களாக விளங்க போகின்றனர் என்பதை நாம் தெளிவாக உணரலாம். ஆனால் அதற்கு நாம் சில விலைகளை கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு பிரசவத்துக்கும் வலி இருப்பதை போல் மீண்டும் அந்நிலையை அடையை இச்சமூகத்துக்கு ஒரு மீள் பிரசவம் தேவைப்படுகிறது என்ற ஷஹீத் சையது குதுப் (ரஹ்) அவர்களின் வார்த்தையை நம்மால் புறந் தள்ள இயலாது.


    தனித்துவமானவர்கள் ஸஹாபாக்கள்


    ஸஹாபாக்களை நாம் எத்தலைமுறையோடும் ஒப்பீடு செய்ய முடியாது. அவர்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்த தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த காரணத்தால் தான் அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள், தபோ தாபியீன்களால் குரானுக்கு விளக்கவுரைகளும் ஹதீதுகளுக்கு தெளிவுரைகளும் எழுத முடிந்தது. ஏனென்றால் சமூகத்தின் ஓட்டத்தோடு அல்ல, சமூகத்தின் ஓட்டத்துக்கு எதிராக இயங்கியவர்கள் ஸஹாபாக்கள். அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு. குளிரூட்டப்பட்ட அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாடம் பயிலவில்லை. இளைப்பாறலே வாளின் கீழ் தான் இருந்தது. அதனால் தான் கனீமத்தாக 40,000 திர்ஹம்கள் கிடைத்த போது குப்பார்களின் சித்ரவதையால் சதை கிழிந்த கப்பாபால் மனமாற ஏற்று கொள்ள முடியாமல் தலையை மறைக்க துணி இல்லாமல் மரணித்த முஸ் அப்பை நினைத்து கவலைப்பட்டார்கள். தன் உயிர் நபியுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த செல்வத்தையும் ஜகாத்தாக கேட்ட போது தர்க்கிக்காமல் சுஹைப்பால் கொடுக்க முடிந்தது. தன் தலைவரின் பாதத்தில் முள் தைப்பதை விட தான் கழுவில் ஏற்றப்படுவது குபைப் ரலிக்கு சுகமாக இருந்தது. அதனால் தான் அண்ணலாரால் அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவி இருக்கிறது என்றும் அவர் படும் துன்பம் சகிக்க முடியாமல் அம்மாரை சுவனம் பார்க்க ஆசைப்படுகிறது என்று சொல்ல முடிந்தது.


    நம்முடைய உம்மத் உண்மையில் மிகச் சிறந்த உம்மத்தாகும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் " என்னுடைய உம்மத் மழைக்கு ஒப்பானது. அது எப்போது வெடிக்கும் என சொல்ல இயலாது, ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ அல்லது இறுதியிலோ இருக்கலாம்" (திர்மிதி, முஸ்னத் அஹ்மத்). முஹம்மது (ஸல்) அவர்களிலிருந்து ஆரம்பித்த உம்மத் ஈஸா (அலை) அவர்களோடு முடிவுறும் பாக்கியம் நிறைந்தது.


    ஸஹாபாக்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாம் இன்று இடிந்து கிடக்கும் சூழலில் அதை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய மகத்தான பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்காக நாம் தயாராவதோடு நம் பிள்ளைகளையும் தயார்படுத்த வேண்டும். இறைவன் நாடினால் ஸஹாபாக்கள் சமூகம் போல் நம்மாலும் கிலாபா மீள் கட்டமைக்கப்படுவதில் பங்கு செலுத்தும் பாக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விட கூடாது.மதீனத்து சமூகம் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல நாம் நிஜமாகவே பார்க்க இயலும். கஃபதுல்லாஹ்வில் தொழும் பாக்கியம் மக்காவில் வசிப்பவனுக்கு. அவன் தொழாதவனாக இருந்தால் அதை விட பெரும் நஷ்டம் இருக்க முடியாது. முடியாதோ அது போல் அப்பொற்காலத்தில் வாழ்ந்து அதன் பலன்களை அறுவடை செய்ய முடியா விட்டால் நம்மை விட துரதிருஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.


    உமர் என்று நம் குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் போதாது. அப்பெயருக்கு உரித்தானவனாக நாம் அவனை வளர்த்தோமா என்று அல்லாஹ்விடத்தில் எப்படி பதில் சொல்ல போகிறோம் என்று நினைத்து பார்த்திருக்கிறோமா. நாம் உமராக, அபூபக்கராக, உஸாமா பின் ஜைதாக, காலித் பின் வலீதாக ஆக வேண்டும் அல்லது அவர்களின் தந்தை என்றாவது அல்லாஹ்விடத்தில் அழுது சொல்ல வேண்டும். நாம் அத்தகைய வாய்ப்பை நழுவ விட்டோமெனில் நம்மை விட கைசேதத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஸஹாபாக்கள் இஸ்லாத்துக்கு ஒரு நாள் முன்னமேயே வந்திருக்க கூடாதா என்று ஏங்குவார்கள். அதை ஈடுகட்ட வியாபாரத்தையே துறந்து திண்ணை தோழர்களாக மாறி போனார்கள்.


    இரண்டு விஷயங்களுக்கு தயாராக வேண்டும்


    1.   தாபாத் - மலை போன்ற உறுதி. பூமிக்கு கீழேயும் வேர்களை கிளப்பி உறுதியாய் நிற்கும் மலைகளை போல் எல்லா சூழலிலும் உறுதியாய் இருக்க வேண்டும். குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க உறுதியாய் இருப்பவர்களுக்கு பரக்கத்தும் அதிகம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

    2.   தத்கியா - தியாகம் செய்வதற்கான ஆவல்.குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நமக்கு மிக முக்கிய தேவை அனைத்தையும் தியாகம் செய்யும் பக்குவம். தூங்கும் போது முஸ்லீமாக தூங்குபவன் விழித்திருக்கும் போது முஷ்ரிக்காக எழும் குழப்ப காலத்தில் நமது உடைமை, பொருளாதாரம், நேரம், உயிர், நமக்கு பிடித்த தலைவர்கள், நாம் சரந்த இயக்கம் அனைத்தையும் அவை பாதகமாக இருப்பின் தூக்கி எறிய தயாராக இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பது மாத்திரம் போதாது, மாறாக இஸ்லாத்தை நபிகளார் காட்டிய அடிப்படையில் நிலை நாட்டுபவர்களாக இருப்பதை கொண்டே ஒரு அமைப்பில் நீடிக்க வேண்டுமே தவிர வெறுமனே அதன் வரலாற்றை கொண்டோ அதை தோற்றுவித்தவர்களை கொண்டோ அல்ல.


    குழப்பத்தின் தன்மை


    கரிய இரவின் நடுவே ஒரு பொருளை பார்ப்பது எவ்வளவு கடினமோ அது போல் இக்குழப்பம் பனிக்காலத்து பனியை போல் தெளிவின்றி இருக்கும். இவ்விருளுக்கு உள்ளே பயணிக்க ஈமானிய ஒளி இருக்க வேண்டும். குழப்பம் முடிந்து தெளிவான பிறகு ஈமான் கொள்வதில் எவ்வித பயனுமில்லை. சில போது உங்கள் பாதையில் யாருமே துணைக்கு இல்லாமல் தனியாக செல்ல நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும். (6:158)

    யூதர்களுடனான மோதல்


    யூதர்களுடன் முஸ்லீம்கள் போரிடாத வரை மறுமை நாள் வராது. ஜோர்டான் நதியின் வடபுறத்தில் அவர்கள் இருப்பார்கள். இப்போரில் முஸ்லீம்கள் வெல்வர். ஒவ்வொரு கல்லும் மரமும் " ஓ முஸ்லீமே. என் பின்னால் ஒரு யூதன் ஓளிந்து கொண்டிருக்கிறான். அவனை கொல்" என காட்டி கொடுக்கும். அப்போதும் அக்கல்லும் மரமும் முஸ்லீம் என நம்மை ஒரு உம்மத்தாக அழைக்குமே அன்றி நம் பிரிவு அல்லது அமைப்பு பெயர்களை கொண்டு அழைக்காது.


    பலஸ்தீனை மீட்போம்,

                  அல் அக்ஸாவை காப்போம்,

    அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கும் சிறைகளுக்கும்

                     எதிராய் போர் தொடுப்போம்.

                         இன்றைய தோல்விகள் தோல்விகள் அல்ல,

                                     நாங்கள் கற்கின்ற பாடம்,

          நபி ஈஸாவும் விரைவில் வருவார்,

                      அது வரை ஓய்ந்திட மாட்டோம்.


    (அன்பு சகோதரர்களே ஒரு உரையினால் ஈர்க்கப்பட்டு உரை நிகழ்த்தி பின் அவ்வுரை கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டதால் எழுத்து நடை சில இடங்களில் பேச்சு நடையில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
    Category: articles

    Tuesday 8 September 2015


    Category: articles
    எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
    ஆசிரியர் தொழில் ஓர் உன்னதமான தொழில். மனித உறவுகளோடு உறவாடும் தொழில். இதனால்தான் “சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது ஆலோசகராக ஒழுங்கமைப்பவராக ஊக்குவிப்பவராக உதவுபவராக இருக்க வேண்டும்” என கல்வியல் அறிஞரான லூயிஸ் கோகலே என்பவர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்கள் பொறுப்பாக செயல்படும் போதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம்.
    ஆசிரியர் வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் போது பாடங்கள் பற்றிய அறிவு மாத்திரம் ஆசிரியருக்கு போதுமானதல்ல பாடத்துடன் சம்பந்தப்பட்ட எவ்வளவு தேர்ச்சியுள்ளதோ அதேபோல் மாணவர்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்ப சூழல் மன நிலை கிரகிக்கும் தன்மை என அவர்களை விளங்கிக்கொள்ளும் நிலையினையும் அடைய வேண்டும்.
    கிரகித்தல் விளங்கிக் கொள்ளல் போன்றவற்றில் மாணவர்கள் மாணவர்களுக்கு வேறுபடுவர். “ஜோனுக்கு லத்தீன் கற்பிப்பதற்கு ஆசிரியர் லத்தீன் மொழியை மாத்திரம் தெரிந்தவராக இருந்தால் மாத்திரம் போதாது. ஜோனைப் பற்றியும் நன்றாக அறிந்திருக் வேண்டும்” என சேர் ஜேம்ஸ் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
    எனவே வகுப்பறையில் உள்ள மாணவர்கள் பல இக்கட்டான சூழலிருந்தும் பொருளாதார நெருக்கடிக்குள்ளிருந்தும் வரும் போது ஆசிரியர் வெறுமனே கற்பித்தல் பணியை மாத்திரம் செய்துவிட்டு அவர்களின் உள்ளுணர்வுகளை தேவைகளை அவாக்களை கடினத் தன்மைகளை புரியாதவராக செல்வாரெனில் அதனால் மாணவர்களின் சிந்தனைத் தூண்டலுக்கு இடமில்லாமற் போகலாம். சில வேளைகளில் மாணவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலமைகளும் மாணவர்களின் விமர்சனத்துக்கு சிக்குப்பட வேண்டிய நிலமையும் ஏற்படலாம்.
    ஆசிரியர் மாணவருக்கு பாடங்களை இலகுபடுத்தி ஆர்வமூட்டும் வகையில் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அமையும். முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசனாகிய நபி (ஸல்) அவர்கள் மக்களை அன்பின் அடிப்படையில் வழிநடத்துபவர்களாகவே இருந்தார்கள். இதனை பின்வரும் திருமறை வசனம் உணர்த்துகிறது
    (விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார். (09:28)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
    “இலகுபடுத்துங்கள்; கஷ்டப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள்” (புஹாரி)
    பொதுவாக மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்லாசிரியர் யார்? இவ்வினாவிற்கு பல கோணங்களிலிருந்தும் விடைகள் ஏவுகணைகளாகப் பாயலாம். ஆயினும் இறுதியாக மாணவர்களின் உள்ளங்களை வென்றவரே மாணவர்களால் எதிர்பார்க்கப்படும் நல்லாசிரியர் என்ற முடிவுக்கு வரலாம். உள்ளங்களை வெல்லுதல் எனும் போது மாணவர்களுடன் சுமுகமாக மட்டுமன்றி அவர்களின் அந்நியோன்யத் தேவைகளைக் கூட அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப் பாடுபடுபவரை மாணவர்கள் பெரிதும் விரும்புவர். அவர்களை தம் வாழ் நாள் பூராவும் மறக்கமாட்டார்கள்.
    கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மாணவர்களின் உள நிலையை அறிதல் வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களையும் மீத்திரன் கூடிய மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது. எனவே ஆசிரியர்கள் எவ்வகையான மாணவர்களுக்கும் பொருத்தமானவாறு நடு நிலையைக் கைக்கொள்பவராக காணப்பட வேண்டும். மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் அளவுக்கு கற்பித்தல் அமையக் கூடாது. மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை பரிகசித்து தண்டித்து கடுமையாக நடந்து கொள்வதை விட அவர்கள் மீது அனுதாபம் கொள்வதே சிறந்த வழியாகும். ஆசிரியர்கள் மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்த வேண்டும்.
    ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித் தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி “அவரைக் கண்டிக்காது விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அவரை அணுகி “இப்பள்ளிவாயல்கள் சிறுநீர் கழிப்பது அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்கு தக்க இடங்களல்ல; இவை அல்லாஹ்வை திக்ர் செய்வது தொழுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்” என்று கூறிவிட்டு ஒருவரை அழைத்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)
    இங்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரின் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு அவரது தவறை அனுதாபத்துடன் நோக்கி மிக நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கிறோம்.
    மாணவர்களுக்கு அன்பு காட்டுவது அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி நாசுக்காக திருத்துவதுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும் அவர்களின் நன்னடத்தைகளை பாராட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும். எப்போதும் ஆசிரியர்கள் திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் அழகாக அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புஹாரி)
    ஆற்றல்களையும் திறமைகளையும் பொருத்தமட்டில் மாணவர்கள் பல தரத்தினவர்களாக காணப்படுவார்கள். விளங்கும் தன்மை கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அவதானித்து தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும் பொருத்தமான நேரத்திலும் வழங்கும் ஆளுமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.
    நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய போது அவர்கள் வித்தியாசமான உபதேசங்களை செய்தார்கள்.
    ஒருவருக்கு “நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு ஷிர்க் வைக்கக் கூடாது” மற்றொருவருக்கு “நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்வீராக” மேலும் ஒருவருக்கு “கோபப்படாதீர்” என அவர்களின் வேறுபாட்டிற்கேற்ப பதில்களை வழங்கினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் தனது கல்விப் போதனைகளின் போது தமது தோழர்களின் தனியாள் வேறுபாடுகளை கவனத்திற் கொண்டு அவர்களுக்கு கற்பித்துள்ளார்கள் என்பதை காணலாம்.
    கற்பித்தல் பணியைச் செய்பவர் வெறுமனே பாட விதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்துவிடலாகாது. மாறாக மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வது அவசியமாகும். ஏனெனில் வெறும் கல்வியை மட்டும் போதிப்பதால் அவர்கள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாத்திரம் பெறலாம். ஆயினும் சமூகத்தில் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் நடந்துகொள்பவர்களாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள நற்பிரஜைகளாக திகழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகிவிடும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான் நபியாக (ஆசிரியராக) அனுப்பப்பட்டதன் நோக்கம் (இப்பூமிப் பந்தில்) நற்போதனைகளை (செயல் வடிவில்) பரிபூரணப்படுத்தவேயாகும்” (புஹாரி)
    அதனால்தான் கற்பித்தல் பணியை ஒரு தொழில் என்பதற்கு பதிலாக ஆசிரியம் ஒரு சிறந்த நற்பணி ஈருலகத்திற்கும் பயனளிக்கும் சேவை என இஸ்லாம் கருதுகிறது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” ஒரு மனிதர் மரணித்துவிட்டால் அவரை விட்டும் அவரது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று விடயங்களைத் தவிர அதில் ஒன்று அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி” (புஹாரி)
    Category: articles
    Ramadanகுர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம்.
    பொறுமையின் பெருமை:
    அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது.
    ‘(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன) நெருக்கடிக் குள்ளாக வேண்டாம்.’ (16:127)
    ‘(நமது) தூதர்களில் உறுதிமிக்கோர் பொறுமையாக இருந்தது போல் (நபியே!) நீரும் பொறுமையாக இருப்பீராக! அவர்களுக்காக நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (பூமியில்) பகலின் ஒரு கணப்பொழுதேயன்றி தாம் தங்கியிருக்கவில்லை என்பது போன்று (உணர்வார்கள். இது) எடுத்துரைக்க வேண்டியதாகும். பாவிகளான இக்கூட்டத்தாரைத் தவிர வேறெவரும் அழிக்கப்படுவார்களா?’ (46:35)
    இவ்வாறே முஃமின்களை விளித்தும் பொறுமை போதிக்கப்படுகின்றது
    ‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (3:200)
    பொறுமையுடையோரை அல்லாஹ் போற்றுகின்றான்
    ‘கிழக்கு, மேற்குத் திசைப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது. மாறாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் நம்புவோரும், தாம் விரும்புகின்ற செல்வத்தை (அல்லாஹ்வுக்காக) நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர் (ஆகியோருக்கும்) அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வழங்கி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தைக் கொடுப்போரும், வாக்குறுதி அளித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, துன்பம், போர் என்பவற்றின் போது சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்களாவர். அவர்கள்தாம் உண்மை உரைத்தவர்கள்; பயபக்தியாளர்கள்.’ (2:177)
    அவர்களை அல்லாஹ் நேசிப்பதாகக் கூறுகின்றான்
    ‘மேலும் எத்தனையோ நபிமார்களுடன் இணைந்து அவர்களைப் பின்பற்றிய பலரும் போர் புரிந்துள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் மனம் தளரவோ, பலவீனப்படவோ, அசத்தியத்திற்கு அடிபணியவோ இல்லை. மேலும், பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.’ (3:146)
    பொறுமையாளர்களுக்கு உதவுவதாக அறிவிக்கின்றான்
    ‘மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து, பலமிழந்துவிடுவீர்கள். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’ (8:46)
    பொறுமை பொறுப்பவர்களுக்கே நல்லது என்று போற்றுகின்றான்
    ‘நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத் தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமை யுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்.’ (16:126)
    அவர்களுக்கு அளவற்ற நற்கூலி வழங்குவதாக வாக்களிக்கின்றான்
    ‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக் கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையான வையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96)
    ‘நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர் களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (39:10)
    அவர்களுக்கு சுவனத்தை அருளுவதாக கூறுகின்றான்
    ‘மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குக் கூலியாக வழங்குவான்.’ (76:12)
    பொறுமை பல வகை:
    01. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்:
    அல்லாஹ்வின் ஏவல்களைச் செயற்படுத்தும் போது பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சகித்துக் கொள்வது முதல் வகை.
    02. தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதில் பொறுமை.
    அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் நாம் ஒதுங்கி வாழ்வதும் பொறுமையே! iஷத்தானிய சக்திகளும் மனோ இச்சையும் தவறின்பால் அழைக்கும். அந்தத் தவறைச் செய்வதில் தற்காலிக இன்பம் கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால்தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும்.
    03. தனக்கு ஏற்படும் சோதனைகள், இழப்புக்கள் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ளல்:
    தனது தேர்வு இல்லாமலேயே ஏற்படும் இழப்புக்களை மனிதன் இலகுவில் சகித்துக் கொள்கின்றான். எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பிவிட்டும் போகின்றான். இவற்றை விரும்பியோ விரும்பாமலோ அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
    சோதனைகள், இழப்புக்களில் இன்னுமொரு வகை உள்ளது. அதுதான் அடுத்த மனிதர்களால் எமக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள், கஷ;டங்கள். இவற்றை மனம் இலகுவாக மன்னிப்பதில்லை. இதற்குப் பழி தீர்க்க வேண்டும் என மனம் வெறி கொள்ளும். இவற்றையும் மன்னிப்பதுதான் உயர்ந்த உள்ளத்திற்கான அடையாளமாகும். நபி(ச) அவர்கள் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். நபி(ச) அவர்கள் இதில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். தீங்கு செய்தவர்களை மன்னித்தது மட்டுமன்றி அவர்களுக்கு நல்லுபகாரமும் செய்தார்கள்.
    ‘நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார்.’
    ‘பொறுமையாக இருப்போரைத் தவிர வேறு எவருக்கும் இ(ப் பண்பான)து கொடுக்கப்படமாட்டாது. மேலும், மகத்தான பாக்கியமுடையோரைத் தவிர வேறு எவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது.’
    (41:34-35)
    இந்த மூன்று வகைப் பொறுமையும் தலைமைத்துவப் பண்பிற்கு அவசியமானதாகும்
    ‘அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, எமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தபோது எமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து நாம் உருவாக்கினோம்.’
    (32:24)
    பொறுமையும் உறுதியும் இணையும் போது தலைமைத்துவத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த உயரிய பண்பை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று வினா இப்போது எழலாம்.
    – உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது! உங்களுக்கு எவராவது ஒரு தீங்கை செய்துவிட்டால் அது அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று உறுதியாக நம்பினால் செய்தவன் இவன் என்றாலும் செய்வித்தவன் அல்லாஹ் என்று எண்ணும் போது பழிவாங்கும் வெறி அடங்கி மனம் கொஞ்சம் பக்குவம் பெறும்.
    – நான் செய்த ஏதோ ஒரு தவறுக்காக அல்லாஹ் இவனை என்மீது ஏவி விட்டிருக்கலாம். எனவே, நான் என்ன தவறு செய்தேன் எனச் சிந்தித்து தவறைத் திருத்த முனைய வேண்டும். இப்படி சிந்திக்கும் போது அவன் தவறு செய்ததற்கு ஒரு வகையில் நானும் காரணம் என மனம் கோபத்தைத் தணிக்கும்.
    ‘உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அது உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டதினாலேயாகும். மேலும், அவன் அதிகமானவற்றை மன்னித்து விடுகின்றான்.’
    (42:30)
    இச்சந்தர்ப்பத்தில் தவ்பா செய்ய வேண்டும். அலி(வ) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,
    ‘ஒரு அடியான் அல்லாஹ்வின் மீதே நல்லெண்ணம் வைக்கட்டும். தான் செய்த தவறுகளுக்காக அச்சப்படட்டும்’ என்பார்கள். மற்றும் சிலர்,
    ‘எந்த பலாய் முஸிபத்து இறங்குவ தென்றாலும் பாவம்தான் காரணமாக இருக்கும். தவ்பாவின் மூலமாகவே அது நீக்கப்டும்’ என்று கூறுவர்.
    – தனக்குப் பிறரால் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வதில் கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது உள்ளம் அமைதிபெறும்.
    ‘தீமையின் கூலி அது போன்ற தீமையேயாகும். எனினும் எவர் மன்னித்து, (உறவை) சீர் செய்து கொள்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ் விடமே இருக்கின்றது. நிச்சயமாக அவன் அநியாயக் காரர்களை நேசிக்கமாட்டான்.’ (42:40)
    ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதில் மூன்று வகையினர் உள்ளனர்
    1. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு அதே அளவு பதிலடி கொடுப்பவர்.
    2. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக தவறு செய்தவனுக்கு பதிலடி கொடுப்பவர். (இவர் அநியாயக்காரர்)
    3. மன்னித்து பொறுமை காப்பவர்:
    இவருக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குகின்றான். அநியாயக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அதேயளவு பதிலடி கொடுப்பவரை அல்லாஹ் விரும்புவதாகவும் சொல்லவில்லை. தண்டிப்பதாகவும் கூறவில்லை.
    எனவே, அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து மன்னித்துவிட்டுப் போகலாம் என உள்ளத்தை ஆறுதல் படுத்தினால் கொந்தளித்து வரும் கோபத்தைத் தணித்துவிடும். கொதிக்கும் உள்ளம் அடங்கிவிடும்.
    – உங்களுக்குத் தீங்கு செய்தவரைப் பழி தீர்ப்பதை விட மன்னித்துவிடுவது உங்கள் உள்ளத்தில் கோபம், ஏமாற்றும் எண்ணம், பழிதீர்க்கும் வஞ்சகம் போன்ற கெட்ட எண்ணங்களை அகற்றிவிடும். உள்ளம் உடனே அமைதி பெற்றுவிடும். பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பழிதீர்க்கும் வரை அது அமைதி பெறாது. அதற்காக நேரத்தை, சக்தியை, பணத்தையெல்லாம் செலவு செய்து சிரமப்பட வேண்டியும் இருக்கும். மன்னித்துவிட்டால் மனம் அமைதி பெற்று விடும். இது ஒரு வகையில் இலாபமாகும்.
    – தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பது உள்ளத்திற்கு ஒரு இழிவாகும். மன்னிப்பது உள்ளத்திற்கு ஒரு கண்ணியமாகும். இதையே நபி(ச) அவர்கள், ‘மன்னிப்ப தால் அல்லாஹ் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகரிப்பதில்லை.’ (முஸ்லிம்) என்றும் கூறினார்கள். தண்டிப்பது வெளிப்படையில் கௌரவ மாகத் தெரிந்தாலும் அந்தரங்கத்தில் அது இழிவாகும். மன்னிப்பது வெளிப்படையில் இழிவாகத் தெரிந்தாலும் அந்த்ரங்கத்தில் அது கண்ணியமாகும்.
    – தன்னைத் தாக்கியவனைத் தான் மன்னித்து தாராளமாக நடந்து கொண்டால் தான் செய்த தவறுகளையும் அல்லாஹ் மன்னித்து தன்னுடன் தாராளமாக நடந்து கொள்வான் என்று எண்ணினால் மனம் அடங்கிப் போகும்.
    – தனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டி அதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பழி தீர்க்கும் போது அது வெற்றி பெறாவிட்டால் அனைத்துமே நஷ;டமாகிப் போகும். அத்துடன் மனம் ஆறுதல் அடையவே மாட்டாது. அதே வேளை, பழி தீர்க்கும் பணியில் நமக்கே மீண்டும் அதில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிடும். இதைவிட மன்னித்துவிட்டால் மனம் நிம்மதி பெறுவதுடன் அல்லாஹ்விடத்தில் கூலியைப் பெறுவது இலாபமானதாகும்.
    – நபி(ச) அவர்கள் தனக்காக யாரையும் பழிதீர்த்ததில்லை. நபி(ச)அவர்களே எமக்கு அழகிய முன்மாதிரியாவார்கள். அவர்கள் உயர்ந்த குணநலன்மிக்கவர்கள். அப்படியென்றால் பழிக்குப் பழி வாங்குவது உயர்ந்த பண்போ அழகிய முன்மாதிரியோ அல்ல. இதை சிந்தித்துப் பார்த்தால் பழிதீர்த்தல் என்பது சிறந்த வழி அல்ல என்பதைப் புரியலாம்.
    அல்லாஹ்வின் ஏவலைச் செய்யும் விடயத்தில் அல்லது தடையை விட்டும் ஒதுங்கும் விடயத்தில் அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் விடயத்தில் எமக்கு எதிராகச் செயற்பட்டவரிடத்தில் பழிவாங்கும் விதத்தில் நடக்காமல் மன்னிப்பது கட்டாயமாகும். ஏனெனில், அல்லாஹ் முஃமின்களின் உயிரையும் உடைமைகளையும் விலை கொடுத்து வாங்கிவிட்டான்.
    ‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர் களிடமிருந்து அவர்களது உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டென விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்; அவர்கள் (எதிரி களைக்) கொல்வார்கள்; (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். (இது) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) தன்மீது கடமையாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும். அல்லாஹ்வை விட, தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் வேறு யார்? எனவே, நீங்கள் செய்த உங்களது இவ்வியாபாரம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.’
    (9:111)
    எனவே, இதற்கான கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும்.
    நாம் ஏதாவது தவறு செய்து அதனால் பாதிப்பைச் சந்தித்திருந்தால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது கோபப்படுவதை விட்டு விட்டு எம்மையே நாம் நொந்து கொள்ள வேண்டியதுதான். நம்மை நாம் திருத்தியாக வேண்டும்.
    உலக விவகாரங்களில் எதையேனும் அடைந்து கொள்ளும் விடயத்தில் நாம் பிறரால் சிரமங்களைச் சந்தித்தால் சிரமங்கள், இழப்புக்கள் இன்றி இந்த உலகில் எதையும் பெற முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
    பொறுமையாளிகளுடன் அல்லாஹ் இருப்பதாகவும் பொறுமையாளிகளை அல்லாஹ் நேசிப்பதாகவும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நாம் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். அல்லாஹ்வின் உதவி கிடைத்தால் பல்வேறு பட்ட தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். இந்த வகையில் நாம் எதிர் நடவடிக்கை எடுப்பதை விட மன்னிப்பது பெரிதும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தால் பழி தீர்க்கும் வெறிநிலையை ஒழிக்கலாம்.
    – பொறுமை ஈமானின் பாதி என்று கூறப்படுகின்றது. ஈமானின் பாதியை இழக்க மனம் இடம் தரக் கூடாது.
    – நாம் பொறுத்துக் கொண்டால் எமக்கு அல்லாஹ் உதவி செய்வான். நாம் பழி தீர்க்கச் சென்றால் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்காது. பொறுப்பவன் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றான். பழி தீர்ப்பவன் தன்னையே நம்பி களத்தில் இறங்குகின்றான். அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைப்பதே அனைத்துவித வெற்றிக்கும் வழியாகும். இதை உணர்ந்தால் பழிதீர்ப்பதை விட மன்னிப்பதே மகத்தான வெற்றி என்பதை அறியலாம்.
    – சில வேளை பழிதீர்ப்பதில் நாம் வெற்றி பெற்றால் கூட பின்னர் மனம் நோகலாம். ஏன் இப்படிச் செய்தோம் என்று எம்மை நாமே நொந்து கொள்ள நேரிடலாம். அல்லது எம்மை மக்கள் சபிக்கலாம். அப்போது மனம் நொந்தாலும் தீர்வு பெற மாற்று வழி இருக்காது.
    – சில வேளை நாம் பழி தீர்த்த பின்னர் மீண்டும் அவன் எம்மைப் பழி தீர்க்க முனையலாம். முன்னரை விட தீவிரமாக நமக்கு எதிராகச் செயற்பட முனையலாம். பின்னர் நம்மை நாம் தற்காத்துக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அல்லது இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இதை விட மன்னித்து விடுவது இலகுவான தல்லவா?
    – பழிதீர்க்க நினைப்பவன் பழிதீர்க்கும் போது கோபம், ஆத்திரம் காரணமாக வரம்பு மீறிவிடலாம். அதனால் அவன் அநியாயக்காரன் எனும் பட்டியலில் அடங்கிவிடுவான். அல்லாஹ்வின் நேசத்தை இழந்து கோபத்தைப் பெற்றுத் தரும் செயல் இதுவாகும். இதனாலும் பழிவாங்கும் எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்.
    – பிறரால் ஏற்படும் தீங்குகளை மன்னிப்பதால் எமது பாவங்கள் மன்னிக்கப்படும்; அந்தஸ்து உயர்த்தப் படும். ஆனால், பழிவாங்கினால் பாவம் மன்னிக்கப்படுவதையும், அந்தஸ்து உயர்த்தப்படுவதையும் நாம் இழந்துவிடுவோம். எனவே, மன்னிப்பதே மேலானதாகும்.
    எனவே, மன்னிப்பதால் ஏற்படும் இது போன்ற நன்மைகளை மனதிற் கொண்டு மன்னிக்கும் மனதைப் பெறலாம். பழிவாங்கும் உணர்வையும் கோபத்தையும் அடக்கலாம். இந்த வகையில் மூன்று வகைப் பொறுமையிலும் உறுதியாக இருப்பதுதான் ஏற்கனவே நாம் கூறிய பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனங்கள் கூறிய பயன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஆகவே, பொறுமை மூலம் உயர்வு பெற முயல்வோமாக!..
    Category: articles
    Related Posts Plugin for WordPress, Blogger...